×

விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் இன்று ஜோகோவிச்சுடன் கிர்ஜியோஸ் பலப்பரீட்சை

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் இன்று மோதுகிறார்.விம்பிள்டன் தொடரில் ஏற்கனவே 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் (35 வயது, 3வது ரேங்க்), 32வது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் பைனலில் விளையாட உள்ளார். விம்பிள்டனில் இது அவருக்கு 8வது பைனல் ஆகும். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெயினின் ரபேல் நடால் 22 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரருடன் 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ள ஜோகோவிச் (தலா 20 பட்டங்கள்) 21வது பட்டம் வென்று நடாலை நெருங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே சமயம் அவரை எதிர்த்து களம் காணும் கிர்ஜியோஸ் (27 வயது, 40வது ரேங்க்) முதல் முறையாக  கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் பைனலில் விளையாட உள்ளார்.  அரையிறுதியில்  அவர் நடாலுடன் மோதுவதாக இருந்த நிலையில், காயம் காரணமாக நடால் விலகவே  நேரடியாக பைனலுக்கு முன்னேறினார்.ஜோகோவிச்சுடன் 2017ல் இரண்டு முறை  மோதிய நிக், அந்த 2 ஆட்டங்களிலும்  வெற்றி  வாகை சூடியுள்ளார். அவருக்கு எதிராக ஜோகோவிச் ஒரு செட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. அவை கடின தரைகளில் நடந்த ஆட்டங்கள்.விம்பிள்டன் போன்ற புல்தரை களங்களில்  இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததில்லை. 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இவர்கள் மோதும் பைனல் இரு தரப்புக்கும்  சவால் நிறைந்ததாகவும், புதிய வரலாறு படைக்கும் ஆட்டமாகவும் இருக்கும்.



Tags : Kyrgios ,Djokovic ,Wimbledon , Today in the Wimbledon tennis final Kyrgios test with Djokovic
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை