கோவையில் தொடர் ஐடி ரெய்டு: எஸ்பி வேலுமணி பினாமிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுமா?

கோவை: கோவையில் எஸ்பி வேலுமணி பினாமிகளின் அலுவலகம், வீடு, நிறுவனத்தில் வருமானத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 4வது நாளாக தொடர்கிறது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் உள்ளார். இவர் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.

அவருக்கு பினாமி. இவரது வடவள்ளி வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, நண்பர்கள் வீடு என 6 இடங்களில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 11 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சந்திரசேகரின் நண்பரும், வேலுமணியின் மற்றொரு பினாமியுமான கேசிபி சந்திரபிரகாஷுக்கு சொந்தமான அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.

கேசிபி நிறுவனம், பீளமேட்டில் உள்ள சந்திரபிரகாஷ் வீடு, ஆகிய 2 இடங்களில் 4வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.  கேசிபி நிறுவனத்தில் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆனால் இன்னும் வருமானத்துறையினர் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரம் தெரிவிக்கவில்லை. எஸ்பி வேலுமணி பினாமிகளான சந்திரசேகர், சந்திரபிரகாசின் அலுவலகங்களில் இருந்து ஸ்மார்ட் சிட்டி உள்பட பல்வேறு ஒப்பந்த பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டு வருமானம் ஈட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

எனவே அவர்களது வங்கி கணக்குகளை முடக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், மேலும் அவர்களின் வங்கி லாக்கர்களை திறந்து பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே பல்வேறு ஒப்பந்த முறைகேட்டில் மாஜி அமைச்சரின் பினாமிகள் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளதால் அதிமுகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: