×

காட்டாங்கொளத்தூர் பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கடைகள்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீராபுரம் ஊராட்சியில் மகேந்திரா சிட்டி சிப்காட் வளாகம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

இதனால் மழைநீர் கால்வாய்களில் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அக்கடைகளில் இருந்து கால்வாய்களில் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் சாலைகளில் குளமாக தேங்கியுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இங்கு மழைநீர் கால்வாய்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கடைகளை உடனடியாக இடித்து அகற்ற மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Kattankolathur , Shops encroaching on rainwater canal in Kattankolathur area: Public demand to remove
× RELATED காட்டாங்கொளத்தூர் அருகே பீர்...