×

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்-இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு : ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து அதிகளவில் மக்கள் வந்து, ஏற்காட்டில் தங்கியிருந்து இயற்கையை ரசிக்கின்றனர்.

அதிலும், நடப்பு மாதம் ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது போல், பனிமூட்டம் இருந்தது. ஏரி பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது.

இதனால், அவ்வழியே வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்தன.இதேபோல், நேற்று காலையிலும் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் இருந்தது. சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. மலைப்பாதையில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள் தரையிறங்கியது போல், பனிமூட்டம் நகர்ந்து சென்றது. இதனை பைக், கார்களில் சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துச் சென்றனர். சிலர் ஆங்காங்கே மலைப்பாதையில் நின்று இதமான குளிரோடு இயற்கையை ரசித்தனர்.

சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்காட்டில் இதமான குளிர் நிலவுகிறது. அதனை வெளியூர் சுற்றுலா பயணிகள் நன்கு அனுபவிக்கின்றனர். இக்குளிர் தொடர்ந்து இருந்து வருவதால், வரும் நாட்களில் இன்னும் அதிகளவில்  சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags : Yercaud , Yercaud: Yercaud, known as the feeder of the poor, receives a large number of local and foreign tourists throughout the year
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து