×

நல்லம்பாக்கம் கூட்டுரோட்டில் புழுதியால் புகை மண்டலமாக காட்சியளிக்கும் சாலை: மரண பள்ளங்களால் விபத்து அதிகரிக்கும் அபாயம்

கூடுவாஞ்சேரி: மெத்தன போக்கில் செயல்படும் நெடுஞ்சாலைத்துறையால் புழுதி நிறைந்து புகை மண்டலம் போல் காட்சியளிக்கும் நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் விபத்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் தொடங்கி ஓஎம்ஆர் சாலையில் முடிவடையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிலோ மீட்டர் கொண்டது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அருகிலுள்ள நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலை குண்டும், குழியுமாகவும், புழுதி நிறைந்த சாலையாகவும் புகைமண்டலம் போல் காட்சி அளித்து வருகிறது. இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டும் வருகிறது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் விபத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளாமல், மெத்தனப்போக்கில் செயல்பட்டு வரும் அதிகாரிகளால் மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  ‘நல்லம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. புழுதி நிறைந்த சாலையாக மாறி புகைமண்டலம் போல காட்சி அளிக்கிறது. மேலும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் மணல் திட்டுகள் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இப்பகுதியில்,  எந்த நேரமும் புழுதி பறப்பதால் அரசு மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை மூடி கொண்டு செல்கின்றனர். மேலும்,  அப்பகுதியில் கனரக வாகனங்கள் வந்து திரும்பும்போது இரவு நேரங்களில் மரண பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும்,  விபத்து ஏற்படும் போது பொதுமக்கள் போராட்டம் நடத்தியும்  எந்தவித பயனும் இல்லை. இதில், மக்கள் போராட்டம் நடத்தும்போது கண்துடைப்புக்காக வரும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். இதனால், மேலும் உயிர்பலி ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.

*பேருந்துகள் நிறுத்தம்
தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர்,  கொளப்பாக்கம், நல்லம்பாக்கம் கூட்டு ரோடு வழியாக கீரப்பாக்கம் வரை 55டி  என்ற 2 மாநகர பேருந்துகள் காலம், காலமாக இயங்கி வந்தது. சாலையின் சீர்கேட்டினால் அதில் இயங்கி வந்த மாநகர பேருந்துகள் கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், பள்ளி மாணவர்கள்,  கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்று  வருபவர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்பட்டு வருவது  மட்டுமல்லாமல், 3 கிலோ மீட்டர் தூரம் வரை அலைந்து திரிந்து பஸ்  போக்குவரத்து தொடர வேண்டிய அவல நிலை உள்ளது.


Tags : Nallampakkam , Road looks smokey with dust on Nallampakkam junction: risk of accidents increases due to potholes
× RELATED தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமானவர்...