×

மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு கூட்டுறவு வங்கியில் துணை ஊழியராக பணி ஆணை வழங்கினார் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் செல்வி ஏ.சுகுணாவும், அவருடன் மூன்று தம்பிகளும், ஒரு தங்கையும் வசித்து வருகின்றனர். இந்த 4 பேருமே மாற்றுத் திறனாளிகள் என்றும் அவர்களை சுகுணா என்ற சகோதரி திருமணமே செய்யாமல் பராமரித்து வருகிறார் என்ற செய்தி ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மூலமாக விசாரித்த போது, இவர்களுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உதவி கிடைப்பதாகத் தெரிய வந்தது. எனவே, இவர்களுக்கு எந்தவிதமான உதவி தேவை என்று கேட்டபோது, அவர்களுக்கு ஏதாவது நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நன்றாக  இருக்கும் என்று கூறினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நலிந்தோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இவரது சகோதர சகோதரிகளுக்கு மாற்றுத் திறனாளி உதவித் திட்டம் கிடைத்து வருவதால், ஒரு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் அயற்பணி முறையில் துணை ஊழியராக பணி ஆணையும், வங்கியின் பொதுநல நிதியிலிருந்து ரூ.20,000/-க்கான வங்கி வரைவோலையுடன், மூன்று சீருடைகளும் வழங்கப்பட்டன.

இந்நிதி உதவி மற்றும் பணி ஆணையை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது. முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,. அவர்கள் செல்வி சுகுணா அவர்களது இல்லத்திற்கே நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து அவருக்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Radhakrishnan , Radhakrishnan gave job orders to 4 differently abled persons as assistant employees in cooperative bank
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்