×

ஒட்டன்சத்திரம் அய்யலூர் சந்தைகளில் ₹4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஒட்டன்சத்திரம் / வடமதுரை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் (ஜூலை 10) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் அமைந்துள்ள நகராட்சி ஆட்டுச்சந்தை நேற்று அதிகாலை 4 மணிக்கே கூடியது.

திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், அய்யலூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்யவும், வாங்கி செல்லவும் வந்ததால் சந்தை களைகட்ட துவங்கியது. செம்மறி கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், வெள்ளாட்டு குட்டிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வடமதுரை அருகே அய்யலூரில் உள்ள வாரச்சந்தையும் நேற்று அதிகாலை முதலே களைகட்டியது. செம்மறி ஆடுகள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூ.300க்கும் விலை போனது. சுமார் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்ததால் கால்நடை விற்போர் மகிழ்ச்சியடைந்தனர்.

அய்யலூர் சந்தைக்கு ஆடு வாங்க வந்த திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை சேர்ந்த அஜித்கான் (25) கூறுகையில், ‘‘அய்யலூர் சந்தைக்கு வரும் ஆடுகள் அனைத்தும் மலைக்கிராம பகுதியில் வளர்க்கப்படுபவை. இவை தரமானதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும் என்பதால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகைக்கு இங்கு வந்து வாங்கி செல்கிறோம். இந்த முறை ஆடுகளின் விலை மிகவும் அதிகமாக இருந்தது’’ என்றார்.

பூசாரிபட்டியை சேர்ந்த வியாபாரி சின்னசாமி (58) கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கொரோனாவால் வியாபாரம் செய்ய முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்தோம்.
 இந்த ஆண்டு பண்டிகைகள் கொண்டாட்டம், கோயில் திருவிழாக்கள் நடப்பதால் ஆடு, கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பக்ரீத்துக்கு எதிர்பார்த்த அளவில் பெரிய ஆடுகள் சந்தைக்கு வரவில்லை’’ என்றார்.

Tags : Otansatram Ayalur Markets , Othanchatram / Vadamadurai: Goats worth Rs. 4 crore were sold in Othanchatram and Ayyallur markets on the occasion of Bakrit festival.
× RELATED ஒட்டன்சத்திரம் அய்யலூர் சந்தைகளில் ₹4 கோடிக்கு ஆடுகள் விற்பனை