×

சிவாஜியின் ரூ.270 கோடி சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர் நடிகர் பிரபு, ராம்குமார் மீது நடிகர் சிவாஜியின் மகள்கள் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம் சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மறைந்த  நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.  கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் இளைய சகோதரி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது.  தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை சகோதரர்கள் விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது. ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.

தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது.  பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டனர். எனவே, தந்தையின் சொத்துக்களில் எங்களுக்கு உரிய பங்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Shivaji ,Prabhu ,Ramkumar , Shivaji, Actor Prabhu, Ramkumar, Actor Shivaji's Daughters Case, High Court,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...