×

குறித்த காலத்தில் கோர்ட் உத்தரவு அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளோம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியிருந்தது.

அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வேண்டிவரும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை நீதிபதியிடம் தெரிவித்து அது தொடர்பான கடிதத்தை தாக்கல் செய்தார். கடிதத்தை பார்த்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அரசுக்கு பாராட்டு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

Tags : iCourt , Court order should be implemented in due course, Letter to authorities, Government information in iCourt
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து