×

கோவை, அருப்புக்கோட்டையில் 2வது நாளாக அதிரடி வேலுமணியின் மேலும் ஒரு பினாமி வீட்டில் ரெய்டு: வருமான வரி சோதனை தொடருவதால் எடப்பாடி ஆதரவாளர்கள் கலக்கம்

சென்னை: எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்களின் வீடு, நிறுவனங்களில் நேற்று 2ம் நாளாக வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அதேநேரத்தில் நேற்று வேலுமணியின் மேலும் ஒரு பினாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக உடையும் நிலையில் நடத்தப்படும் இந்த ரெய்டு எடப்பாடி ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அனந்தபுரி நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, எஸ்பிகே அன்கோ நிறுவனத்தலைவர் செய்யாத்துரை வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடத்தினர். அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள பூர்வீக வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், செய்யாத்துரை வீட்டிற்கு வருமான வரித்துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் வந்தனர். செய்யாத்துரை, அவரது மகன் கருப்பசாமி மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். வீட்டில் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர். மேலும், வங்கிகளுக்கு சென்று அவரது கணக்குகளை ஆய்வு செய்தனர். சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

வேலுமணி நண்பர் சந்திரசேகர்: கோவையில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் நண்பரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் 13 மணி நேரம் சோதனை நடத்தினர். அவரது தந்தை வீடு, ஆலயம் அறக்கட்டளை அலுவலகம் என 6 இடங்களில் சோதனை நடந்தது.

இந்நிலையில், நேற்று காலை அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள சந்திரசேகரின் நண்பர் சந்திர பிரகாஷின் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்த பணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம், பல்வேறு நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறைக்கு செலுத்திய வரி விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அங்கிருந்த ஆவணங்கள் சோதனைக்கு எடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதே நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் கேசிபி நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்திரசேகர் கேசிபி நிறுவனத்தில் இயக்குநராக இருந்துள்ளார். பின்னர் அவர் தீவிர அரசியல் காரணமாக இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. இவரது நண்பரான சந்திர பிரகாஷ் கேசிபி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் மாஜி அமைச்சர் வேலுமணியின் பினாமி என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டில், கோவை மாநகராட்சியில் அதிகளவு திட்ட பணிகள் நடத்தியதாக தெரிகிறது.

அதிக ஒப்பந்த பணிகள் கேசிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆதரவு காரணமாக கேசிபி நிறுவனத்திற்கு அதிக ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நிலையில் இருக்கிறது. எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரை சார்ந்தவர்களின் வருமானம் தொடர்பான ஆதாரங்களை பெறும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் புலியகுளம் பெரியார் நகரில் உள்ள ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் ரெய்டு நடத்தினர். இதில் ஆலயம் அறக்கட்டளை பெயரில் பெறப்பட்ட தொகை, அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சமுதாய பணிகள், செலவிடப்பட்ட தொகை, அறக்கட்டளைக்கு முறையான கணக்கு இல்லாமல் பணம் வந்துள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மருதமலை அடிவாரம் பகுதியில் உள்ள இன்ஜினியர் சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். செந்தில் பிரபு கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார். இவரும் கோயில் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில் செய்து வருவதாக ெதரிகிறது. இவர் சந்திரசேகரின் பல்வேறு தொழில்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்களை கவனித்து வருகிறார்.

எந்த தொழிலில் எவ்வளவு வருமானம் வரும்?, யாரிடமும் பணத்தை எப்படி ஒப்படைக்கவேண்டும்? என செந்தில் பிரபு முடிவு செய்து செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பிரபு வீட்டில் சொத்து, தொழில்களில் பெறப்பட்ட வருவாய் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அரசியல், ஒப்பந்த பணிகள், அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெறப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முறைகேடாக, வரி ஏய்ப்பு செய்த பணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை வடவள்ளியை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் வீடு, அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக குழந்தைசாமி, இயக்குநர்களாக ஆனந்த்வடிவேல், சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கிளை அலுவலகம் பெரியார் நகரில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தின்போது, இந்த கிளை அலுவலகம் காலி செய்யப்பட்டது. ஆனாலும் அலுவலகம் மூடப்படவில்லை. ஓரிரு ஊழியர்கள் மட்டும் கவனித்து வந்துள்ளனர்.

நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அலுவலகத்தில் எவ்வித ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பினாமியான இன்ஜினியர் சந்திரசேகருக்கு பின்புலமாக இந்த கட்டுமான கிளை அலுவலகம் இயங்கியதா? என்ற சந்தேகமும் பரபரப்பும் எழுந்துள்ளது. அதிமுக இரண்டாக உடையும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் அடுத்தடுத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக இருப்பதாகவும், அதனால்தான் வேலுமணியின் ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து எடப்பாடிக்கு ஆதரவு தரும் மாஜி அமைச்சர்களுக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜ இருப்பதாகவும், அதனால்தான் வேலுமணியின்  ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும்  கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து எடப்பாடிக்கு ஆதரவு தரும் மாஜி அமைச்சர்களுக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி சோதனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Action Envoy ,Arapukkonte ,Gove ,Edapadi , Coimbatore, Aruppukkottai, Velumani, raid on benami house, income tax check,
× RELATED தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிடும்...