×

50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்பிக்கள் போர்க்கொடி இங்கிலாந்தில் நெருக்கடிக்கு பணிந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா: அக்டோபரில் புதிய பிரதமர் தேர்வு

லண்டன்: இங்கிலாந்தில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்பி.க்கள் உட்பட 50 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சி புதிய பிரதமரை அக்டோபர் மாதம் தேர்வு செய்யும் வரை, இடைக்கால பிரதமராக அவர் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதன் துணை கொறடாவாக இருந்த எம்பி. கிறிஸ் பின்சர், ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் போரிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், போரிஸ் மீதும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், போரிஸ் ஜான்சனை கண்டித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சர் ரிஷி சுனாக், சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித், உயர் கல்வி அமைச்சர் வில் குயின்ஸ், பள்ளிக் கல்வி அமைச்சர் ராபின் வால்கர் ஆகியோர் நேற்று முன்தினம் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, ஈராக் வம்சாவளியை சேர்ந்த நதீம் சஹாவி நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் போரிஸ் ஜான்சன் நியமித்தார். இதனிடையே, போரிஸ் ஜான்சனுக்கு சுனாக் வெளிப்படையாக எழுதிய கடிதத்தில் அவர் பதவி விலகும்படி, `கோ நவ்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றும் பல அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், எம்பி.க்கள், மூத்த அதிகாரிகள் பதவி விலகினர். இதுபோல், கட்நத 2 நாட்களில் தொடர்ச்சியாக 50 பேர் ராஜினாமா செய்தது, போரிஸ் ஜான்சனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். வரும் அக்டோபரில் ஆளும் பழமைவாத கட்சியின் மாநாடு நடக்கிறது. இதில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரையில், இடைக்கால பிரதமராக போரிஸ் ஜான்சனை தொடர்வார் என்று அவரது கட்சி தெரிவித்துள்ளது. போரிஸ் ஜான்சனுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பின்னடைவால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போரிஸ் மீதான குற்றச்சாட்டுகள்
* பின்சர் விவகாரம்: பாலியல் புகாருக்குள்ளான கிறிஸ்டோபர் பின்சரை பழமைவாத கட்சியின் துணை கொறடாவாக நியமித்தது.
* பார்ட்டி கேட்: கொரோனா தொற்று காலத்தில் பிரதமரின் இல்லத்தில் ராணி எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நடந்த அன்று சட்ட விரோதமாக பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி நடத்தியது.
* இதர பாலியல் புகார்கள்: ஆளும் கட்சியை சேர்ந்த அகமது கான் பாலியல் குற்றச்சாட்டிலும், நீல் பரிஷ் நாடாளுமன்றத்தில் தனது மொபைலில் ஆபாச படம் பார்த்த புகாரில் சிக்கியது.
* பிரதமர் இல்லம் புதுப்பிப்பு: பிரதமர் இல்லத்தை புதுப்பிக்க கிடைத்த நன்கொடை குறித்து புகார் அளிக்காமல் விட்டது. இதற்காக 17,800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
* ஓவென் பேட்டர்சன் விவகாரம்: முன்னாள் அமைச்சர் ஓவென் பேட்டர்சன் வக்கீலுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைநீக்கம் செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கடந்தாண்டு பரிந்துரைத்தது. இதையடுத்து, அவர் பதவி விலகினார். இதற்கான இடைத்தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தது.

* ‘உலகின் மிகச் சிறந்த வேலை’
பதவியை ராஜினாமா செய்த பிறகு பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், `பழமைவாத கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். உலகின் சிறந்த வேலையை விட்டு விட்டு போக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள் என்று யாரும் கிடையாது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவருக்கு முழு ஆதரவு அளிப்பேன். இங்கிலாந்து மக்கள் எனக்கு அளித்த மகத்தான முன்னுரிமைக்கு நன்றி,’ என்று தெரிவித்தார்.

* ரிஷி சுனாக் புதிய பிரதமர்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக்கின் பெயரும், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் போரிஸ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். இவரது தாத்தா பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். புகை, குடி பழக்கம் இல்லாதவர். கொரோனா தொற்றில் இருந்து வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் விடுபட கோடிக்கணக்கிலான நிதி தொகுப்பை அறிவித்ததன் மூலம் இங்கிலாந்தில் பிரபலமானாவர். கர்நாடகாவை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்துள்ளார். அதேபோல், நேற்று முன்தினம் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட  நதீம் சஹாவிக்கு (55) அடுத்த பிரதமராகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களில் யார் பிரதமரானாலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் பிரதமரான பெருமையை பெறுவார்கள்.

Tags : UK ,Boris Johnson , More than 50 ministers, MPs surrender to crisis in UK Prime Minister Boris Johnson resigns: New PM to be elected in October
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...