புழல், சோழவரம் காவல் நிலையத்தில் வீணாகும் வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்

புழல்: புழல், சோழவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் துருப்பிடித்து வீணாவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை ஏலத்தில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சோழவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீண்ட காலமாக காவல் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவை துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

மழைக் காலங்களில் இந்த வாகனங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்று மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன. இதேபோல் புழல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் காவல் நிலையத்தை சுற்றிலும் உள்ள தெருக்களில் நீண்ட காலமாக துருப்பிடித்து வருகின்றன.

இதனால் அப்பகுதியிலும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே, வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்ற உத்தரவு பெற்று, ஏலத்தில் விட சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: