சிவகாசி: வெயில் கொளுத்தும் நிலையிலும் வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் குறையாததால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே, 7.5 மீ உயரமுள்ள அணை கட்டப்பட்டுள்ளது. சங்கரன்கோவில், திருவேங்கடம், பிளவக்கல் டேம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் பெய்யும் மழையால் இந்த அணைக்கு நீர்வரத்து இருக்கும். இதில் தேக்கப்படும் நீர் மூலம் வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் பாசன வசதி பெறுகிறது. இது தவிர அணையிலிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 20 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. அணையை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணை நிரம்பி வெள்ளநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பின், ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது கோடை முடிந்தும் மழையின்றி வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும், அணையில் 5 மீ உயரத்திற்கு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அணையை சுற்றியுள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் குறையவில்லை. இதனால் விவசாய பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பருவமழை சரிவர ெபய்யவில்லை. இதனால் விவசாயி பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை வெயிலிலும் அணையின் நீர் வற்றாமல் 5 மீட்டர் உயரத்திற்கு தேங்கி இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.