×

அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு..!

டெல்லி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர்.

அன்றைய தினம் தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். இந்தபொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்; பொருளாளராக ஓபிஎஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. கட்சி செலவுக்கான தொகையை எடுக்க முடியாத நிலையை ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளார். தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை இழந்துவிட்டதால் தான் பொதுக்குழுவுக்கு தடை கோருகிறார். அதிமுக செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் ஓபிஎஸ் முடக்கப் பார்க்கிறார். ஓ.பன்னீர்செல்வம் செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று கூடுதல் மனுவில் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.


Tags : Edapadi Palanisamy ,Supreme Court ,Panneerselvath , OPS is trying to freeze AIADMK: Edappadi Palaniswami additional petition in Supreme Court against O. Panneerselvam..!
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...