×

எஸ்ஐ நியமன முறைகேடு விவகாரத்தில் கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி போலீசார் அதிரடி

பெங்களூரு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிஐடி போலீசார் மாநில ஏடிஜிபி அம்ருத் பாலை நேற்று கைது செய்தனர். முறைகேடு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில அரசு 545 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்வதற்கு முடிவு செய்தது. இப்பணிகளை நிரப்ப கடந்த 2021 அக்டோபரில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியாகும் முன்பே இதில் முறைகேடு நடந்துள்ளது  என மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர்  குற்றம்சாட்டினர். இதையடுத்து சிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.  

விசாரணையை தொடங்கிய சிஐடி போலீசார், ஆட்சேர்ப்பு பிரிவின் துணை போலீஸ் எஸ்பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், துணை போலீஸ் ஏஸ்பி., ருத்ரேகவுடா கைது செய்யப்பட்டனர். பின்னர், முறைகேடு நடந்த சமயத்தில் போலீஸ் நியமன ஏடிஜிபியாக இருந்த அம்ருத் பாலிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்த நிலையில் ஏடிஜிபி அம்ருத்பால் ஐபிஎஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கலெக்டரும் சிக்கினார்
இதற்கிடையே, கர்நாடகாவில் ஏடிஜிபி ைகதான அதே நாளில் கலெக்டர் ஒருவரும் கைதாகி உள்ளார். பெங்களூரு நகர மாவட்டம், ஆனேக்கல் தாலுகா, கூட்லு கிராமத்தை சேர்ந்த விவசாயி அஷம்பாஷாவுக்கு சொந்தமான 38 குண்டால் நிலம் தொடர்பான வழக்கில் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்காமல் கலெக்டராக இருந்த மஞ்சுநாத் நிலுவையில் வைத்திருந்தார். கடந்த வாரம் அஜம்பாஷா, கலெக்டர் மஞ்சுநாத்தை பார்த்து கேட்டபோது, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அஜம்பாஷா, லஞ்ச ஒழிப்பு படையிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து காத்திருப்பு பட்டியலுக்கு கலெக்டர் மஞ்சுநாத் மாற்றப்பட்டார். பின்னர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற உத்தரவுடன் அவரை நேற்று கைது செய்தனர்.

Tags : Karnataka ,ATGP ,SI ,CIT police , Karnataka ATGP arrested in SI appointment scam: CIT police in action
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...