×

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் வீணாவதை தடுக்க 3 இடங்களில் தடுப்பணை: 1342 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில் 3 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், 1342 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த பணிகளை முடிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால், இந்த மழை நீரை சேமித்து வைக்க கடந்த ஆட்சி காலத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கூவம், கொசஸ்தலையாறு, அடையாறு உள்பட பல்வேறு ஆற்றுப்படுகைகளில் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டிஎம்சி வீணாக கடலில் கலக்கிறது. இதனால் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மாநிலம் முழுவதும் ஆயிரம் தடுப்பணைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், நபார்டு வங்கியின் கடனுதவி மூலம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வன்னியநல்லூர் மற்றும் ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஒங்கூர் ஆற்றின் குறுக்கே ரூ.4.51 கோடியில் தடுப்பணை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இருமரம் கிராமத்தின் அருகே புத்தலிமடுவு குறுக்கே ரூ.2.95 கோடியில் தடுப்பணை, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சோரஞ்சேரி கிராமத்தின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.62 கோடியில் தடுப்பணை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதை தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டள்ளது. தற்போது, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சோரஞ்சேரி கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்ேக தடுப்பணை அமைக்கும் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பணை அமையும் பட்சத்தில் 440.29 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோன்று, செய்யூர் அருகே வன்னியமநல்லூர் மற்றும் ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஒங்கூர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடுப்பணை அமைக்கப்படும் பட்சத்தில் 523.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காஞ்சிபுரம் மாவட்டம் புத்தலிமடுவு குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை விரைவில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மூலம் 378.071 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்த தடுப்பணைகள் அமைக்கும் பணியை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்ப பணிகளை விரைந்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Thiruvallur ,Kanji ,Chengalbatu , Tiruvallur, Kanchi, Chengalpattu, Barrage: Irrigation facility
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...