மகளிர் உலக கோப்பை ஹாக்கி முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி: இங்கிலாந்து - இந்தியா இன்று மோதல்

ஆம்ஸ்டெல்வீன்: மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மகளிர் ஹாக்கி உலக கோப்பையின் 15வது தொடர் நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இத்தொடரில் அதிகபட்சமாக 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்பு நடந்த 14 தொடர்களிலும் அதிகபட்சமாக 12 அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளில் லீக் சுற்று நடக்கிறது. இந்திய அணி பி பிரிவில்  சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் சவாலை சந்திக்கிறது.

இந்தியா -  இங்கிலாந்து மோதும் லீக் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். அடுத்து ஜூலை 5ம் தேதி சீனா அணியுடனும், ஜூலை 7ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் இந்தியா மோத உள்ளது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த முதல் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள  ஸ்பெயின் - கனடா அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. லீக் சுற்று ஜூலை 7ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து 9 முதல் 16வரை இடங்களுக்கான ஆட்டங்களும், காலிறுதி, அரையிறுதி, 5 முதல் 8வரை இடங்களுக்கான ஆட்டங்களும் நடத்தப்படும். பைனல் ஜூலை 17ம்தேதி நடக்கும். அதே நாளில் 3,4வது இடங்களுக்கான ஆட்டமும் நடைபெறும்.

Related Stories: