×

சென்னை, கோவை மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு; எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.  இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து  செய்யக் கோரி வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.   அப்போது, நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக எப்படி தாக்கல் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு தலைமை நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். அந்த மனு மீது லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றார். அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றனர்.

அதற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு வழக்கறிஞர், இந்த மனு மீது முடிவெடுக்கும்வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை ரத்து செய்யகோரும் இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வரும் 18ம் தேதி விசாரணை நடத்தப்படும்  என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Chennai ,Coimbatore Corporation ,Malpractice ,SB Velumani ,Court , Chennai, Coimbatore Corporation Tender Malpractice; Prosecution of SB Velumani cannot be stayed: High Court again orders
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்