×

பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கு.: அமலாக்கத்துறையில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும்போது சிவசேனாவினர் திரள வேண்டாம்: சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

மும்பை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும் போது சிவசேனாவினர் திரள வேண்டாம் என்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத் எம்.பி வலியுறுத்தியுள்ளார். அமலாக்கத்துறை பத்ரா குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சம்மன் அனுப்பியது.

அதாவது, மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனம் ரூ.1,039 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், ரூ.100 கோடியை பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு அன்று ஆஜராகவில்லை. அதேவேளையில் அவரது வழக்கறிஞர் மும்பை பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

அப்போது, அலிபாக்கில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்ததால் சஞ்சய் ராவத்தால் ஆஜராக முடியவில்லை என்றும், முக்கிய ஆவணங்களை சேகரித்து விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால் சஞ்சய் ராவத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க அமலாக்கத்துறை மறுத்துவிட்டது. அதனையடுத்து ஜூலை 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆஜராகும்படி அவருக்கு புதிய சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.

இந்தநிலையில் சிவசேனா கட்சி மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் இன்று விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு ஆஜராகும் போது சிவசேனாவினர் திரள வேண்டாம் என்று சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Batra Slum ,Shiv Sena ,Enforcement Department ,Sanjay Rawat , Bhadra cottage renovation project abuse case: Shiv Sena not to mobilize when it comes to enforcement at 12 noon: Sanjay Rawat insists
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு