வேன் கட்டணம் செலுத்தாததால் மாணவனுக்கு டிசி கொடுத்த பள்ளி; திருச்சி அருகே பரபரப்பு

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் சாலப்பட்டியை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்-கலைச்செல்வி. இவர்களது மகன் சித்தீஷ்வரன்(7). முசிறி தனியார் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக சித்தீஸ்வரன், தனது தாயுடன் காத்திருந்தார். ஆனால் வேனில் இருந்த உதவியாளர் பரமசிவம் சிறுவனை வேனில் ஏற்ற முடியாது. 400 ரூபாய் வேன் கட்டணம் பாக்கி உள்ளது என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி 11 மணிக்கு வந்து கட்டி விடுகிறேன் என கூறியும், கேட்காமல் வேனை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதைக்கண்ட கலைச்செல்வியின் உறவினர்கள் பைக்கில் சென்று வேனை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேன் உதவியாளர் பரமசிவம் மாணவன் சித்தீஷ்வரனை வேனில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் கலைச்செல்வியை பள்ளிக்கு நேரில் வருமாறு நிர்வாகம் போன் மூலம் அழைத்தது. இதையடுத்து பள்ளிக்கு வந்த கலைச்செல்வியிடம், பள்ளி வேனை எதற்காக தடுத்து நிறுத்தினீர்கள் என கேட்டு மாணவனின் டிசியை கொடுத்துள்ளனர்.

டிசியை வாங்க பெற்றோர் மறுத்தபோது இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெற்றோர் டிசியை மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் கொடுக்க முயன்றபோது, அவர்கள் டிசியை கீழே வீசி எறிந்தனர். ஒரு கட்டத்தில் பெற்றோர் டிசியை பெற்றுக் கொள்கிறோம், மாணவனுக்கு கட்டிய ரூ. 7500 பணத்தை திரும்ப தர வேண்டும். புத்தகத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்றனர். ஆனால்  கட்டணத்தை திரும்ப தர முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாணவனின் பெற்றோர் திருச்சி மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலர், முசிறி போலீஸ் டிஎஸ்பி அருள்மணி, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். சம்பவம் குறித்து டிஎஸ்பி அருள்மணி விசாரணை மேற்கொண்டு வருகிறார். பள்ளி வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: