×

நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு; வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில் புதிய தீர்மானங்களை இயற்ற தடைக்கேட்டிருந்தார்.  இந்த மனுவை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பொதுக்குழுவில் புதிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக கூறி சண்முகம், நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிராகரித்து விட்டனர். பின்னர், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தரமாக நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர்.

அவைத் தலைவரை நியமிக்கும் இந்த தீர்மானம், ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் இடம் பெறவில்லை. நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் சட்டவிரோதமாக வெளியிட்டனர். எனவே, கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து இயற்றப்பட்ட தீர்மானத்துக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

 நீதிமன்ற உத்தரவைஅவமதிக்கும் விதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வரும் திங்கள் கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

அவமதிப்பு வழக்கு மட்டும் நீதிபதிகளிடம் சண்முகம் தரப்பு வழக்கறிஞர் ராம், ‘’நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘’நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும். அவமதிப்பு வழக்கு மட்டும் ஜூலை 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துகொள்ளபடும். மற்ற கோரிக்கைகளுக்கான மனு வரிசையில் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும்’ என்றனர்.

Tags : Edapadi Palanisami , Contempt of court against Edappadi Palaniswami for passing resolution in AIADMK general meeting in defiance of court order; The case comes up for hearing on Monday
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு