×

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!: நாகையில் சட்டவிரோத சாராய கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பெண்கள்..!!

நாகை: நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாராய கடையை பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் சாராயம், பாக்கெட் போடப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கீழ கண்ணாப்பூர், வலிவனம், திருகுவளை பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை அப்புறப்படுத்தக்கோரி பலமுறை பெண்கள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கீழ கண்ணாப்பூர் பகுதியில் சாராய கடை நடத்தி வரும் முத்துகிருஷ்ணன்  என்பவரிடம் ராமசாமி என்பவர் தனது மனைவியின் தாலியை அடகு வைத்து சாராயம் வாங்கி குடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமசாமியின் மனைவி அனிதா, தன் கணவரிடம் சென்று முத்துகிருஷ்ணனிடம் தன் தாலியை கேட்டுள்ளார். தாலியை தர மறுத்த முத்துகிருஷ்ணன், அனிதா, அவரது கணவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதை கேள்விப்பட்ட அந்த கிராம பெண்கள் இன்று காலை முத்துகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி சாராய கடையை அடித்து நொறுக்கினர். கீத்து கொட்டகையில் இருந்த சாராய பாக்கெட்டுகள், பாத்திரங்களை ஆவேசமாக சாலையில் வீசி எறிந்த பெண்கள் ஒவ்வொரு கீற்றாக பிடிங்கி எரிந்து அந்த கடையை தரைமட்டமாக்கினர். நாகை மாவட்டத்தில் புற்றீசல் போல பெருகி வரும் சட்டவிரோத மதுக்கடைகளை அகற்ற மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nagai , Naga, illegal liquor store, women, looting
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு