×

தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை ஒன்றிய அரசு தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து  தடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு  பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் ரம்பி போன்ற இணையதள விளையாட்டுகளால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதுடன், பெருமளவில் பணத்தை இழக்கிறார்கள். கடன் தொல்லை மற்றும் தற்கொலை சம்பவங்களும் நிகழ்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 10ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை, இதனால் ஏற்படும் ஆபத்துகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் சந்தித்து தங்களது அறிக்கையை சமர்பித்தது. இதில், இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

71 பக்க அறிக்கையில் ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதற்கு சொல்லப்படுவது தவறானது. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்திய அரசியல் சாசனம் 252ஐ பயன்படுத்தி ஒன்றிய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டுவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags : U.S. government , The U.S. government should bring in legislation at the national level to stop online rummy: Chandru-led panel recommends government
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...