பெண்ணிடம் செயின் பறித்து எஸ்கேப், திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே பரபரப்பு

விராலிமலை: விராலிமலை அருகே பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடிக்க ரோட்டை மறித்து நின்ற மெக்கானிக், பைக் ஏற்றி  கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பொது மக்கள் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராப்பூசலை சேர்ந்தவர் ரேகா(33). இவர் நேற்று மாலை டூவீலரில் ராப்பூசலில் இருந்து கீரனூருக்கு சென்றார்.

இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த சின்னராஜ்(23) துலுக்கம்பட்டி பிரிவு சாலையருகே  ரேகா அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக் கொண்டு வேகமாக சென்றார். இதில் நிலைதடுமாறிய ரேகா பின்னர், சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டபடி திருடனை விரட்டிக்கொண்டு டூவீலரில் சென்றார். மேலும் திருடன் தப்பிச்செல்லும் வழியில் உள்ள எஸ்.நாங்குபட்டி கிராமத்தில் உள்ள தனது உறவினர்கள் சிலருக்கு, செல்போன் மூலம்  தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருடன் தப்பி வரும் சாலையில் துலுக்கம்பட்டி அருகே, அவனை மடக்கி பிடிக்க எஸ்.நாங்குபட்டியை சேர்ந்த சிலர் காத்திருந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஆனந்த முத்துக்குமார்(47) என்பவர் சாலையின் குறுக்கே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த திருடன், ஆனந்தமுத்துகுமார் மீது பைக்கை ஏற்றினார்.

இதில் ஆனந்தமுத்துக்குமார் பலத்த காயமடைந்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த திருடன், சின்னராஜ் பைக்கை போட்டு விட்டு தப்ப முயன்றார். அவரை அப்பகுதியினர் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீசார் பலத்த காயமடைந்த ஆனந்த முத்துக்குமாரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆனந்த முத்துக்குமார் உயிரிழந்தார். மேலும் கீழே விழுந்ததும், பொதுமக்கள் தாக்கியதிலும் காயமடைந்த திருடன் சின்னராஜ் புதுகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெற்று திரும்பியவுடன் கைது ெசய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: