மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்குக்கு தடையில்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னை: மாநகராட்சிகளின் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ.811 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக மாஜி அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வழக்கறிஞர், மனுவில் கூறப்பட்ட புகார்களில் முகாந்திரம் இல்லை என லஞ்சஒழித்துறை இயக்குனர் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டதாக கூறினார்.

வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்தபின் வழக்கு பதிந்தது தவறு என வாதிட்டார். உள்நோக்கத்துடன் வழக்கு பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி வழக்குப்பதிவு செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என தெரிவித்தார். இந்த வழக்குக்கு தடை விதிக்க மறுத்து வழக்கை ரத்து செய்யகோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: