×

ஜூலை 5 வரை முன்பதிவு செய்யலாம்; அக்னிவீரர்கள் சேர்ப்பு திட்டம் விமானப் படையில் தொடக்கம்: என்சிசி மாணவர்களுக்கு கூடுதல் சலுகை

குவாலியர்: அக்னிபாதை திட்டத்தில் சேர்க்கப்படும் தேசிய மாணவர் படையில் (என்சிசி) பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது. நாட்டின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக, அக்னிபாதை திட்டத்தின் கீழ் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பபை கடந்த 14ம் தேதி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. இத்திட்டத்தை கைவிடும்படி எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், திட்டத்தை கைவிட முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், அக்னவீரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில் சேரும் அக்னிவீரர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் நடந்த 3 மாத என்சிசி பயிற்சியில் பங்கேற்ற 112 மாணவிகள் என்சிசி பெண் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட ராணுவ  ஜெனரல் குர்பிர்பால் சிங், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘நாட்டின் இளைஞர்களை சிறந்த குடிமக்களாக்கும் பொறுப்பு என்சிசி அதிகாரிகளுக்கு உள்ளது. என்சிசி.யில் பெண்கள் கடந்த 1950ம் ஆண்டு முதல் உள்ளனர். என்சிசி.யில் ஏ, பி, சி சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு, அக்னிபாதை ஆட்சேர்ப்பு திட்டத்தில் கூடுதல் மதிப்பெண்ணும், சலுகைகளும் வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரிகளில் என்சிசி.யை கட்டாயமாக்குவது குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார். இந்நிலையில், விமானப்படையில் அக்னிபாதை திட்டத்தில் சேர விருப்பம் உள்ள இளைஞர்களுக்கான முன்பதிவு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் தொடங்கியது. இதற்கு ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விமானப்படை நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அதேபோல், `கடற்படையில் அக்னி வீரர்களாக சேருவதற்காக வரும் ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்,’ என்று கடற்படையின்  இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

சர்வாதிகார பிரதமர்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `ஒருபுறம் நாட்டின் பரம்வீர் விருது பெற்ற தேச பக்தர்கள். மற்றொரு புறம், சர்வாதிகார பிரதமர். புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே செவி சாய்க்கப்படும். நாட்டின் தேசிய ஹீரோக்களுக்கு அல்ல,’ என்று பதிவிட்டுள்ளார். இத்துடன், பரம்வீர் சக்ரா விருது பெற்ற ஓய்வு பெற்ற கேப்டன் பனா சிங், அக்னிபாதை திட்டம் குறித்து தெரிவித்த டிவிட்டர் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

Tags : NCC , Reservations can be made until July 5; Firefighters Recruitment Program Launch in the Air Force: Additional Offer for NCC Students
× RELATED போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி