போரூர் ஏரியை ரூ.100 கோடியில் சீரமைக்க திட்டம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மாநகரில் ஆக்கிரமிப்பு மிகுந்த ஏரிகளில் ஒன்றாக உள்ள போரூர் ஏரியை ரூ.100 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுப்பணித்துறையானது நான்கு வெவ்வேறு கூறுகளை உள்ளடங்கிய இத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள உபரி நீர் வெளியேறும் கால்வாய் மீட்டெடுக்கப்படும். இந்த கால்வாயானது புதிதாக தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடியிருப்புகள் வழியாக சென்றது. மேலும் இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் மழை பெய்த போது கொளத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது கொளத்துவாஞ்சேரியில் உள்ள தந்திகால்வாய்-ராமாபுரம் நல்லா ஏரிக்கு இடையில் உபரி நீர் வெளியேறும் வகையில் மறுசீரமைக்கப்படும். ராமாபுரம் நல்லா ஏரியானது அங்கிருந்து அடையாற்றில் பாய்கிறது. ஆறு மாதங்களில் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் நடுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் இப்பணியை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம், முடிந்ததும், தனலட்சுமி நகர், குமார நகர், ஸ்ரீசாய் நகர், மதுரம் நகர், ஜோதி நகர் மற்றும் மாங்காடு ஏரிக்கு அருகில் உள்ள பாலாஜி நகர், சீனிவாசபுரம், கொளுத்துவாஞ்சேரி, பரணிபுத்தூர், பட்டூர், பெரியப்பனச்சேரி, ஐயப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதானந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளுக்கு தண்ணீர் வராது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: