×

அதிமுக ஆட்சியில் மூடப்பட்டஅரசு போக்குவரத்து கழக பணிமணையை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கிழக்கு கடற்கரை சாலை விளங்குகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லக்கூடிய இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி, சென்னை என 2 முக்கிய துறைமுகங்களை இணைக்கும் சாலையாகவும் இந்த சாலை உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனக்கு சொந்தமான பேருந்துகளை பராமரிக்க ஆங்காங்கே  பல்வேறு பகுதிகளில் பணிமணை நிறுவி உள்ளது. ஒரு நகரில் பணிமனைகள் அமைக்கப்பட்டால், அந்த பணிமனையில் இருந்து பல புதிய வழித்தடங்களில் குறிப்பாக பல குக்கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்கும் வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு பகுதிகளில் புதிதாக அரசு போக்குவரத்து கழக பணிமணைகளை நிறுவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 3 இடங்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமணைகள் இருந்தன. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த திமுக ஆட்சியின் போது அறந்தாங்கி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த உதயம்சண்முகம் கோரிக்கையை ஏற்று அப்போதைய தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மணமேல்குடியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையை திறந்து வைத்தார். மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமணை வாடகை கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.தொடர்ந்த வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் பணியாற்றிய பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். அதே போல அங்கு நிறுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் இருந்து மணமேல்குடி வந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து மட்டுமே அங்கு நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாவலர் மட்டுமே பணியில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமணைக்கு மின்கட்டணம் கூட செலுத்தமுடியாத நிலை நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மணமேல்குடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடிவிட்டு, வாடகை கட்டிடத்தில் இருந்து வெளியேறியது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த எந்த கட்சி கொண்டு வந்தாலும், அது மக்களின் திட்டம் என்ற கோணத்தில் செயல்படாமல், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமணைக்கு கடந்த 10 ஆண்டுகளாக இடம் ஒதுக்காமல் அதிமுக அரசு அலட்சியம் செய்தது. இந்த நிலையில் தற்போது முக்கியத்துவம் அதிகம் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமணையையே மூடி இப்பகுதியின் வளர்ச்சியையே தடுக்கும் செயலை செய்துள்ளது.

எனவே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பனிமணைக்கு நிரந்தர கட்டிடம கட்டி, அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளையும் இயக்க தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 3 இடங்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமணைகள் இருந்தன.

Tags : AIADMK government , AIADMK government should reopen closed state transport corporation: Public demand
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...