கல்லூரியில் டிசி வாங்க வந்தபோது விபரீதம் பைக் மீது கார் மோதி 2 பேர் பரிதாப பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கல்லூரியில் மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகத் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (21). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பார்மசி கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சொந்த மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று தனது நண்பரான நசரத்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருடன் கல்லூரிக்கு வந்து டி.சி. யை (மாற்றுச்‌ சான்றிதழை) கேட்டு விண்ணப்பித்துள்ளார். அடுத்த வாரம் வரும்படி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து உமாசங்கரும் அவருடன் பைக்கில் வந்த விஜய் ஆகிய இருவரும் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியதில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த விஜய் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல் சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: