×

பிளஸ்-2 படிக்காமல் பி.காம் படிக்க ஆசையா? பாலிடெக்னிக் கல்லூரியில் டி.காம் சேரலாம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம் படிப்பிற்கு மவுசு அதிகம். இதனை படித்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் இந்த படிப்பிற்கு எப்போதும் மவுசு உள்ளது. இதனால், கலை அறிவியல் கல்லூரிகளில் முதலில் நிரம்பும் துறை பி.காம்தான். இதனால், பி.காம் படிக்க ஆசையுடன் காத்திருக்கும் பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. பிளஸ்2-வில் அதிகம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பி.காம் கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு டி.காம் என்ற வணிகவியல் டிப்ளமோ படிப்பும், டி.காம் சி.ஏ என்ற படிப்பும் வழங்கப்படுகிறது.

இந்த 3 ஆண்டு வணிகவியல் டிப்ளமோ படிப்புகள் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள கோவை அரசினர் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படுகிறது. தவிர, தரமணியில் உள்ள சென்னை மாநில வணிகவியல் பயிலக கல்லூரி,  நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை டாக்டர் தர்மாம்பாள் அரசின் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதில், பி.காம் பாடத்திற்கு இணையான பாட முறை உள்ளது. இதற்கு ஆண்டு கட்டணம் ரூ.2,500-க்கும் குறைவாக இருக்கும். இந்த டி.காம் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் நேரடியாக கல்லூரிகளில் பி.காம் இரண்டாம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம்.

இதனால், பி.காம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ள மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு பிறகு பிளஸ்1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுதாமல், நேரடியாக பி.காம் படிப்பில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் டி.காம் படித்த மாணவர்களை லேட்ரல் என்டரி (நேரடியாக இரண்டாம் ஆண்டில்) மூலம் சேர்க்க 10 சதவீத இடஒதுக்கீடு அரசால் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். பிரகதி திட்டத்தில் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் தகுதியுள்ளவர்கள் பெற முடியும்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் 94444-39493, 90430-23344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தற்போது, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. எனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், www.tnpoly.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் ஜூலை 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையம் வாலியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும்.


Tags : D.Com ,Polytechnic College , Want to read B.Com without reading Plus-2? D.Com can join Polytechnic College
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...