×

அபயா கொலை வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்: தண்டனை நிறுத்திவைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் கான்வென்டில் தங்கியிருந்த அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோட்டயம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அபயாவின் பெற்றோர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. ஆனால் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சிபிஐயின் 2 பிரிவுகள் நடத்திய விசாரணையிலும் அபயா தற்கொலை செய்து கொண்டதாகவே கூறப்பட்டது. சிபிஐயின் 3வது குழுதான் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டார் என்று கண்டுபிடித்தது.

இது தொடர்பாக பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் இந்த வழக்கில் பாதிரியார் தாமசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிரியார் ஜோஸ் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதால் விசாரணை முடியும் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி 2 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் வினோத் சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் 2 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Tags : Abaya ,Kerala High Court , Abaya murder case; Kerala High Court grants bail to priest, nun
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...