×

சோளிங்கர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு

சோளிங்கர்:சோளிங்கர் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சி ராமாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. மேலும் மின்கம்பங்களும் சாலையிலேயே உள்ளது. இதனால் அவசர தேவையின்போது ஆம்புலன்ஸ் செல்லவும், நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஜமாபந்தியின்போது மனு அளித்தனர். அதன்பேரில் கடந்த மாதம் 30ம்தேதி நில அளவர்கள் மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை, சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி சோளிங்கர்-லாலாபேட்டை சாலையில் உள்ள குத்துக்கல்மேடு பஸ்நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் மற்றும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுந்து நின்றது.

இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விஏஓ ஷானு, ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ‘ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நாளை நோட்டீஸ் வழங்கப்படும். இதைதொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Sholingur , Public roadblock demanding removal of occupants near Cholingar: Traffic damage
× RELATED சோளிங்கரில் அரசால் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்