27ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக் டெல்லியில் நடந்த முதல் பேச்சுவார்த்தை தோல்வி

புதுடெல்லி: வங்கிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், நிலுவையில் உள்ள இதர பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:வரும் 27ம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இதையடுத்து, இன்று (நேற்று) தலைமை தொழிலாளர் ஆணையத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.

இதில், ஒன்றிய அரசு, நிதி அமைச்சகம், இந்தியன் வங்கி சங்கம், எங்களின் ஒன்பது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டோம். இதில் எங்களின்  கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால், போராட்டத்தை தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.வரும் 23ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதிலும், உடன்பாடு ஏற்படவில்லை என்றால் திட்டமிட்டபடி வரும் 27ம் தேதி 10 லட்சம் ஊழியர்களுடன் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: