×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27ம் தேதி அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, புதிய திட்டங்களுக்கான அனுமதி, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்னரே எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது.

மேலும், ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்ப்பிக்க உள்ள நிலையில், புதிய சட்ட மசோதா சீர்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதேபோல், ஜூலை மாதம் 28ம் தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிக்கான முன்னேற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.  இந்த கூட்டத்தில் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : 27th Cabinet Meeting ,Chief Minister ,MK Stalin , Led by Chief Minister MK Stalin Cabinet meeting on 27th: Consultation on key issues
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...