×

மழை பெய்து வருவதால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 2299 கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் வர தடை

ஓசூர்: கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1452 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1600 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40.51 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று 1,128 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2299 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2426 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிறிய மதகு மற்றும் பிரதான மதகு 1 ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் அணையின் அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் கேஆர்பி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.70 அடிக்கு தண்ணீர் உள்ளது.


Tags : KRP Dam , Rain, KRP Dam, Tourist Ban,
× RELATED வீணாகும் குடிநீர்