×

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்

* பீகார், உபி, ஜார்க்கண்ட்டில் போலீஸ் குவிப்பு * 600 ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 600 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பந்த் காரணமாக, சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவையில் வீரர்களை சேர்க்கும் புதிய அக்னிபாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் ரயில், பஸ்களை எரித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பினர் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நேற்று நடந்தது. ஏற்கனவே பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், அரியானாவில் போராட்டத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. 223 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ், 379  பயணிகள் ரயில் என மொத்தம் 602 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 612 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.இதற்கிடையே, டெல்லியில் அக்னிபாதை திட்டம் மற்றும் ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டமும் நடைபெற்றது. டெல்லியில் முழு அடைப்பு போராட்டத்தால், கன்னாட் பிளேஸ், டெல்லி-நொய்டா சாலை, மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, ஆனந்த் விகார், சராய் காலே கான், பிரகதி மைதான் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது. கன்னாட் பிளேஸ் அருகே சிவாஜி பாலத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  

முழு அடைப்பு போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. எல்லைப் பகுதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்பட பொதுஇடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஜார்க்கண்டில் 2 விரைவு அதிரடிப்படை, 6 பட்டாலியன் ரயில்வே பாதுகாப்பு போலீஸ், 24 பட்டாலியன் ஒன்றிய ஆயுதப்படை போலீஸ் உள்பட 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.  செல்போன்கள், வீடியோ பதிவு சாதனங்கள், சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. பாரத் பந்த் போராட்டம் காரணமாக பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி முக்கிய விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பு, அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து வரும் 24ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

தொண்டரை காரில் அழைத்துச் சென்ற பிரியங்கா
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமலாக்கத்துறை அலுவலகம் வழியாக பிரியங்கா காந்தி நேற்று சென்று கொண்டிருந்த போது, போஸ்டரில் உள்ள ராகுல் படத்தை ஆடையாக அணிந்து வந்த இளைஞரை பார்த்தார். காரை நிறுத்த சொல்லி அவரை தன்னுடைய காரில் பிரியங்கா போராட்டத்துக்கு அழைத்து சென்றார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.




Tags : Nationwide Bharat Bandh ,Agnipathai , Against the Fire Project Nationwide Bharat Bandh struggle
× RELATED அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்