மதுராந்தகம் நகராட்சியில் முறையான பராமரிப்பில்லாத பெரியார் பூங்கா: சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் முறையான பராமரிப்பில்லாத பெரியார் பூங்காவை    உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி நூலகம் அருகே, தந்தை பெரியார் பூங்கா உள்ளது. இங்கு, சிறுவர்கள் விளையாடவும், மாணவர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பூங்கா நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பூங்காவை சுற்றி உள்ளது. எனவே, ஏராளமான மாணவ, மாணவியர் தினந்தோறும் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது உண்டு. இந்நிலையில்,  இங்குள்ள உஞ்சல், சறுக்கு உள்பட சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி  கருவிகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் துருப்பிடித்தும் சேதமடைந்தும் உடைந்தும் காணப்படுகின்றன. இதனால், அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உடைந்த சிறுவர் விளையாட்டு கருவிகளை அகற்றி புதிதாக அமைத்து சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: