×

250 ஆண்டுகள் பழமையான கட்டிடம் பழமை மாறாமல் புனரமைப்பு அருங்காட்சியகமாக மாறும் ஹூமாயூன் மகால்

* அகழாய்வு பொருட்களை மக்கள் பார்வையிடலாம்
* ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை: சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மகாலில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணி, வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகாலை அருங்காட்சியகமாக மாற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 250 ஆண்டுகள் பழமையான ஹூமாயூன் மகால் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் வேளாண்மை துறை, கைவிரல் ரேகை பிரிவு, அச்சக பிரிவு, சமூக நலத்துறை உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த 2005ம் ஆண்டு இந்த கட்டிடம் வலுவிழந்ததால் அங்கிருந்த அரசு அலுவலகங்கள் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் கீழ்த்தளம் முற்றிலும் எரிந்து விழுந்த நிலையிலும், முதல்தள கூரைகள் இடிந்து மிகவும் மோசமான நிலையிலும் காணப்பட்டது. மேலும், மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து கட்டிடம் பாழடைந்து இருந்தது.

இதையடுத்து, தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, நீதிபதி பத்மநாபன் தலைமையில் 2007ல் ஏற்படுத்தப்பட்ட குழுவினரால், ஹூமாயூன் மஹால் கட்டிடம் முதல்வகை புராதான கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டது. இந்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்யும் வகையில் கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் பேரில், ஹூமாயூன் மகாலை மறுசீரமைக்க தமிழக அரசால், ₹41.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த கட்டிடத்தின் முகப்பில் மேற்குப்புறம் 3 பெரிய குவிமாடம், உயர் கோபுரம், உயர் வளைவு நுழைவாயில் மற்றும் உள்ளார்ந்த வேலைபாடுகளுடன் கூடிய தேக்கு மரத்தினால் ஆன மரப்படிகள் 4 புறமும் அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் 9 நீண்ட பொது அறைகள் மற்றும் முதல்தளத்தில் 4 பொது அறைகள் மற்றும் 4 புறமும் நடைபாதை தாழ்வாரங்கள் மற்றும் முதல் தளத்தில் திறந்தவெளியில் 4 புறமும் சீமை ஓடுகளுடன் கூடிய சாய்தள கூரை கட்டுமான பணி முடிக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் ஒரு பொது அறை சீமை ஓடுகளால் வேயப்பட்ட சாய்தளக்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டிடத்தில் தரை மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 108 எண்ணிக்கையிலான இரண்டு தட்டு அடுக்கு மிகப்பெரிய தேக்கு மரக்கதவுகள் ஒரு அடுக்கு லூவர்டு கதவும், மற்றொரு அடுக்கு கண்ணாடியினால் ஆன கதவுமாக அமைக்கப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் ஆன வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

புனரமைப்பு பணிகள் முடிந்த பிறகு, இந்த கட்டிடத்தை அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யாமல், பழமையை பேணிகாக்கும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற அதிகாரிகள் மடிவு செய்துள்ளனர். அதில், ஒரு பகுதியில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. மற்றொரு பகுதியில் வேளாண்மை துறை சார்பில் அருங்காட்சியகம் வைக்கப்படுகிறது. இதில், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை சார்பில் தானியங்கள், அரிய வகை மலர்களால் அருங்காட்சியம் போன்று அமைக்கப்படுகிறது. தற்போது, கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது, என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘இந்தோ சராசெனிக்’ கட்டிடக்கலை நுட்பம்
உலகிலேயே ‘இந்தோ சராசெனிக்’ கட்டிடக்கலை நுட்பத்தில் 1768ம் ஆண்டு ஹூமாயூன் மகாலை பிரபல கட்டிட கலைஞரான ஆங்கில பொறியாளர் பால் பென்பீல்டு வடிவமைத்து கட்டினார். நவீன இந்தியாவின் முதல் இந்திய சாராசெனிக் கட்டிடம் என்ற பெருமையையும் இந்த கட்டிடத்துக்கு உள்ளது. 1768 முதல் 1855ம் ஆண்டு வரை ஆற்காடு நவாப்பின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் இது இருந்தது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஆங்கில கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வடிவமைப்பு மற்றும் இந்திய பொருட்களின் தொகுப்பில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.

* கட்டிடத்தின் ஒரு பகுதியில் அகழ்வாராய்ச்சி பொருட்களும், மற்றொரு பகுதியில் வேளாண்மை துறை  சார்பில் அருங்காட்சியகமும் வைக்கப்படுகிறது. இதில், தோட்டக்கலை மற்றும்  வேளாண்மை துறை சார்பில் தானியங்கள், அரிய வகை மலர்களால் அருங்காட்சியம்  போன்று அமைக்கப்படுகிறது.

* பழமை மாறாமல் புனரமைக்க சுண்ணாம்பு கலவை மூலம் ஹூமாயூன் மகால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் இருந்து மணல், நெல்லை மாவட்டம் கழுகுமலையில் இருந்து சுண்ணாம்பு, ராஜபாளையத்தில் இருந்து பழமை வாய்ந்த கல் மற்றும் கடுக்காய் போன்றவை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

Tags : Humayun's Mahal , 250 year old building Reconstruction of old unchanged Will become a museum Humayun Mahal
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...