×

போலி டிக்கெட்டில் சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவர் கைது

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் போலி விமான டிக்கெட் மூலம், பயணி போல் நுழைந்த கனடா நாட்டு குடியுரிமை பெற்ற மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (43). கனடா நாட்டு குடியுரிமை பெற்று, அந்த நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு வந்தார். அவரிடம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட் இருந்தது. அந்த டிக்கெட்டை காட்டி, பயணிபோல் விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் நுழைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் புறப்பாடு பகுதி வழியாக வெளியே செல்ல வந்தார்.
அங்கு பணியில் இருந்த சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர், சசிகுமாரை நிறுத்தி விசாரித்தார். அதற்கு அவர், ‘துபாய் செல்ல வந்துள்ளேன். ஆனால் தற்போது பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே வெளியில் செல்கிறேன்’ என்றார். ஆனால் அந்த டிக்கெட்டில் “ஆப் லோடு” என்ற சீல் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை உயரகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சரியான பதிலளிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

பின்னர், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். போலி விமான டிக்கெட் என தெரிந்தது. மேலும், இவரது மனைவி வெளிநாடு செல்வதால், அவரை வழியனுப்ப வந்துள்ளார். ஆனால் விமான நிலையத்தில் பார்வையாளா்களுக்கு அனுமதி இல்லை. எனவே சசிகுமார் போலியான விமான டிக்கெட் தயாரித்து பயணி போல் நடித்து விமான நிலையத்திற்குள் சென்றிருந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நீண்ட நேரமாக விசாரித்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அனைத்து பாதுகாப்புகளையும் மீறி, போலி விமான டிக்ெகட்டை காட்டி ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai airport , Man arrested for entering Chennai airport on fake ticket
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்