×

எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எம்ஜிஎம் குழுமம் தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த குழுமத்தின் பெயரில் அம்யூஸ்மென்ட் பார்க் ஒன்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, சென்னை சாந்தோம், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சோதனையானது தற்போது நிறைவு பெற்றது. இதில் ஏறக்குறைய 400 கோடி வரிஏய்ப்பு செய்ததற்கான பில் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும், 3 கோடி கணக்கில் வராத ரொக்கமும், 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வினை மேற்கொண்டு வருவதாகவும், இதில் கிடைக்கப்பெறும் தகவல்களில் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : MGM Group ,Income Tax Department , MGM Group, Rs 400 crore, tax evasion, income tax
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...