×

உள்ளாவூருக்கு வரும் அரசு பேருந்தை தொண்டாங்குளம் வரை நீட்டிக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்  ஒன்றியத்துக்குட்பட்டது தேவரியம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டாங்குளம் கிராமம் இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும்  பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருவோர் அதிகம்.

இந்நிலையில் நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்திலிருந்து உள்ளாவூர் வரை இயக்கப்படும் டி57 பேருந்தில் பள்ளி செல்வதற்காக தங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கிருந்து அரசு பேருந்து மூலமாக  சென்று வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் சென்று வரும் மாணவ,மாணவிகள் சோர்வடைந்து காணப்படுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது தேவரியம்பாக்கம் ஊராட்சி.  இந்த ஊராட்சிக்குட்பட்ட தொண்டாங்குளத்தில் படிக்கும்  மாணவ,மாணவிகள்  பள்ளிக்கு செல்லவேண்டும் எனில் உள்ளாவூர் பேருந்து தவிர,  வாரணவாசி, தேவரியம்பாக்கம், உள்ளாவூர் ஆகிய பகுதிகளில் தான் பேருந்து ஏறி செல்ல வேண்டும். அவ்வாறு பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் 3 லிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்ல வேண்டும்.

அப்படி இல்லை எனில் உறவினர்கள் யாராவது உதவியோடு பைக்கில்  சென்று இறங்கி அங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை உள்ளாவூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்து தொண்டாங்குளம் வரை நீடித்து தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை .

 தற்போது பள்ளி ஆரம்பித்துள்ள நிலையில் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட போக்குவரத்து துறையினர் உள்ளாவூர் பேருந்தை தொண்டாங்குளம் வரை பேருந்தை நீட்டித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள், மாணவ,மாணவிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Ullavur ,Thondangulam , Ullavur, Government Bus, Thondangulam, Villagers insist
× RELATED தோண்டாங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு