×

கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில் நாங்குநேரியில் நிற்காது: ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி

நாங்குநேரி: கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நாங்குநேரியில் நிற்காது என ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாங்குநேரி ரயில் நிலையத்தை நாங்குநேரி மற்றும் திசையன்விளை தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது பல்வேறு பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வண்டி எண்: 2261 கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், நெல்லை, மதுரை போன்ற முக்கிய நகரங்களின் வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டது. தற்போது பல ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஜூன்  27ம்தேதி முதல் ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில் நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே அந்த ரயில் நின்று சென்ற நாங்குநேரி ரயில் நிலையம் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.  நாங்குநேரி நிறுத்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நாங்குநேரியில் இருந்து இந்த ரயிலை பயன்படுத்தி சென்று வந்தனர்.  

தற்போது இருந்த நிறுத்தத்தை ரயில்வே நிர்வாகம் அகற்றி உள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நாங்குநேரி ரயில் நிறுத்தத்தை வழக்கம்போல செயல்படுத்திட தென்னக ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அவ்வாறு நாங்குநேரியில் நிறுத்தம் தரப்படவில்லை எனில்  பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என நாங்குநேரி வட்டார ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags : Kanyakumari ,Rameeswaram ,Nanguneri , Kanyakumari-Rameeswaram train will not stop at Nanguneri: Passengers shocked by railway announcement
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...