ஆப்கானில் குருத்வாரா மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்: 2 பேர் பலி, 7 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி நடக்கிறது. இந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள கார்டா பர்வான் பகுதியில் அதிகளவில் இந்துக்களும், சீக்கியர்களும் வசித்து வருகின்றனர். இங்குள்ள குருத்வாராவில் நேற்று ஏராளமான சீக்கியர்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென குருத்வாரா மீது மர்ம நபர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் குருத்வாரா கட்டிடம் சேதமடைந்தது. அதில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். முன்னதாக, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், தற்கொலைப் படை தாக்குதல் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆப்கான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அப்துல் நபி கூறுகையில், ‘‘சம்பவ இடத்தில் தீவிரவாதிகளுக்கும், தலிபான் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.

* இந்தியா கண்டனம்

குருத்வாரா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஆப்கான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: