×

சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு; பயணிகள் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்றிரவு 8.30 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 154 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் ஏறுவதற்கு முன்பு, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். இயந்திர கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பொறியாளர்கள், விமானத்தில் ஏறி பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் விமானம் புறப்படும் நேரம் குறித்த தகவலை அறிவிக்கவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பின்னர், விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அமைதி காத்தனர். இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் விமானம் பழுது பார்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இன்று அதிகாலை ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. 4.30 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். உரிய நேரத்தில் பழுது கண்டுபிடிக்கப்பட்டதால் 154 பயணிகள் உயிர் தப்பினர்.


Tags : AirIndia ,Chennai ,Muscat , Engine malfunction on Air India flight from Chennai to Muscat; The passengers escaped
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...