×

ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தாக்கியதால் கரூர் காங். எம்பி ஜோதிமணி ‘அட்மிட்’; டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை

புதுடெல்லி: டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது போலீசாரின் தாக்குதலுக்கு ஆளான கரூர் எம்பி ஜோதிமணி, ெடல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக 3 நாட்கள்  ெடல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதற்கு  எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்  நடத்தினர். காங்கிரஸ் தலைமையகத்திற்குள் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து  தாக்கியதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

இவ்விவகாரம்  தொடர்பாக வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச்  சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு  வலியுறுத்த உள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கரூர் தொகுதி எம்பி ஜோதிமணியும் பங்கேற்றார். அவரும் மற்ற நிர்வாகிகளை போன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜோதிமணியின் ஆடை கிழிந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொடூரமான முறையில் டெல்லி போலீஸ் என்னை தாக்கியது’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள ஜோதிமணி, ‘காங்கிரஸ்  தலைமையகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது, என்னையும் எங்களது  கட்சி எம்பிக்களையும் போலீசார் தாக்கினர். எனவே டெல்லி காவல்துறைக்கு எதிராக  சிறப்புரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார் தாக்கியதில் உடம்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஜோதிமணி, டெல்லி டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Karur Kong ,Jyoti Mani ,Delhi Hospital , Karur Cong MP Jyoti Mani ‘Admit’; Treated at Delhi Hospital
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...