×

20க்கும் அதிகமான கண்மாய்களை இணைக்கும் அஞ்சுகோட்டை வரத்து கால்வாய் தூர்வாரப்படுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவாடானை : திருவாடானை ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை இணைக்கும் அஞ்சுகோட்டை வரத்து கால்வாய் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை ஒன்றியத்தில் மணிமுத்தாறு என்று அழைக்கப்படும் காட்டாற்றில் ஒரு பிரிவாக அஞ்சுகோட்டை வரத்துக்கால்வாய் உள்ளது. இந்த நீர் வரத்து கால்வாய் மழை பெய்யும் போது அஞ்சுகோட்டை கண்மாய் தண்ணீர் பெருகி திருவாடானை, மணிகண்டி, ஆதியூர், கருப்பூர், மாஞ்சூர், திருவெற்றியூர், முகில் தகம், நம்புதாளை உட்பட 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக கண்மாய்கள் நிறைந்து, இந்த கால்வாய் வழியாக மீதமுள்ள தண்ணீர் கடலில் போய் கலக்கும்.

இந்த கால்வாய் பல ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல ஊர்களை இணைத்து செல்வதால் அதிகமாக மழை பெய்யும் போது வயல்களில் உள்ள தண்ணீரையும் இந்த கால்வாய் வழியாக தான் விவசாயிகள் வடிக்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடைக்கிறது. இந்த கால்வாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி நாகநாதன் கூறுகையில், இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் போதும் முழுமையாக தூர்வாரப்பட வில்லை சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல்தொலைவுள்ள இந்த கால்வாயை ஏதாவது 2 கிலோ மீட்டரில் தூர்வாரி விட்டு வேலையை முடித்து விடுகின்றனர்.

மேலும் இந்த கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்து கிடக்கிறது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறி ஓட வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. போதிய மழை பெய்த போதிலும் கண்மாய்களில் தண்ணீரை தேக்க முடிவதில்லை. அதிக மழை பெய்யும் போது வயல்களில் உள்ள தண்ணீரை இந்த கால்வாயில் வடித்து ஓட விடுவார்கள். ஆனால் ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்து கிடப்பதால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது.

இந்த வரத்து கால்வாயை நம்பி 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. மழை காலத்தில் இந்த கால்வாய் வழியாக ஒவ்வொன்றாக நிரம்பி அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்லும். பல ஆண்டுகளாக வரத்து கால்வாய் தூர்வாரப்படாததால் கண்மாய்களை முழுமையாக பெருக்கி வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே அரசு இந்த கால்வாயை அளவீடு செய்து அதில் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி விட்டு இந்த கால்வாயின் முழு நீளத்தையும் தூர்வார சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Anjukottai , Thiruvadanai, Anjukottai Water Source,Water Supply canal
× RELATED கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை