×

ஜனாதிபதி தேர்தல் பணிகளை கவனிக்க 14 பேர் குழுவை அமைத்தது பாஜ

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்காக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜ அமைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் தேர்வில் பாஜ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இக்கட்சியின் வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்ட நிலையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பாஜ திட்டமிட்டு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ தலைவர் ஜேபி.நட்டா நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பணிகளை நிர்வாகம் செய்வதற்காக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை பாஜ நியமித்துள்ளது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனோவால், அர்ஜூன் மேகாவல், பாரதி பவார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது தவிர, பாஜ தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தவ்தே, சிடி ரவி, தருண் சக், பாஜ தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா, தேசிய செயலாளர் ரித்து ராஜ் சின்ஹா, சம்பித் பாத்ரா, ரஜ்தீப் ராய் ஆகியோரும், தமிழகத்தில் இருந்து வானதி சீனிவாசனும் இக்குழுவில் இடம் பெற்றுள்ள்ளனர். பாஜ மாநில நிர்வாகிகளையும், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

17 எதிர்க்கட்சிகள் 21ம் தேதி முடிவு: பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இது தொடர்பாக கடந்த 15ம் தேதி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொது வேட்பாளராக போட்டியிட மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, பொது வேட்பாளரை முடிவு செய்வதற்காக சரத் பவார் தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 17 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் வரும் 21ம் தேதி டெல்லியில் மீண்டும் நடத்தப்பட உள்ளது. இதில், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரில் ஒருவர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கருதப்படுகிறது.

Tags : Bajaj , Bajaj formed a 14-member committee to oversee the presidential election process
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி