×

உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்ததை போல், நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்!!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி  நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை அண்மையில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த நிலையில் ஆளுநர் தாமதம் செய்வதால் தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி நளினியும் ரவிச்சந்திரனும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது தடா சட்டப்பிரிவின் நளினி தண்டிக்கப்பட்டாரா என்பதற்கான அசல் தீர்ப்பை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த தீர்ப்பின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது வாடிய நளினி தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். எனவே இருவரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வாதிடப்பட்டது.

மேற்கண்ட வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு,உச்சநீதிமன்றம் அரசியல் சாசனப்பிரிவு 142வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது போல், நளினியையும் ரவிச் சந்திரனையும் விடுதலை செய்ய உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றத்தைப் போல் விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்,இவ்வாறு தெரிவித்தனர்.  



Tags : Nalini ,Supreme Court , Supreme Court, Perarivalan, Liberation, Nalini, Ravichandran
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...