×

சென்னை வியாசர்பாடியில் 12 குடிசைகள் எரிந்து சாம்பல்

சென்னை: சென்னை வியாசர்பாடி அன்னை இந்திராகாந்தி நகர் 20வது தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டு, கொழுந்துவிட்டு எரிந்தது. காற்றில் தீ வேகமாக அடுத்தடுத்த குடிசைகளில் பரவி, எரிய தொடங்கின. தகவலறிந்து, சத்தியமூர்த்தி நகர் மற்றும் கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறுகலான இடம் என்பதால் தீயணைப்பு வண்டிகள் உள்ளே செல்வதில் சிறிது சிரமம் ஏற்பட்டது. பின்னர், மிகப்பெரிய ராட்சத பைப்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ராஜாமுத்து, முருகன், சுஜாதா, மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட 12 பேரின் குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மதிய நேரம் என்பதாலும், பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று இருந்த காரணத்தினாலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.ஆனால், வீட்டில் இருந்த பீரோ, துணி மணிகள், சமையல் பாத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் கருகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.தொடர்ந்து, வடக்கு மண்டல துணை வட்டார ஆணையர் சிவகுரு பிரபாகரன், தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி மதிவாணன், பெரம்பூர் வட்டாட்சியர், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.தீவிபத்துக்கான காரணம் குறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai Vyasarbadi , 12 huts burnt to ashes in Vyasarpadi, Chennai
× RELATED 100 இளம்பெண்களிடம் பாலியல் சேட்டை: வியாசர்பாடியை சேர்ந்தவர் கைது