×

நாடாளுமன்ற அலுவலகத்தில் காங்.எம்பிக்கள் முக்கிய ஆலோசனை: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து புகார் மனு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடுமுழுவதும் 3-வது நாளாக, நேற்று போராட்டங்கள் தொடர்ந்தன. இதில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்குள் போலீசார் புகுந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று, அப்புறப்படுத்தி, காயப்படுத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னணி தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடந்த போராட்டத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ராகுல்காந்தியை வஞ்சிப்பதாக புகார் தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒன்றிய அரசு எதிரான பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் ஊர்வாம் சென்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக புகார் தெரிவித்து, புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை நோக்கி காங்கிரசார் பேரணி சென்றனர்.

அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி. உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே டெல்லி போலீசாரின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் அக்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரது தலைமையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து அவர்கள் புகார் மனு அளித்தனர்.


Tags : Congress ,Speaker ,Lok Sabha ,Om Birla , Office of Parliament, Cong.MP, Consultation, Speaker of the Lok Sabha, Om Birla, Complaint
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...